மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஏக்நாத் ஷிண்டே


மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஏக்நாத் ஷிண்டே
x

மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் கிட்டத்தட்ட ஆகிவிட்ட நிலையில், முதல் மந்திரி யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. மராட்டியத்தில் ஆளும் மகாயுதி கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் தனிபெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளது. எனினும், முதல் மந்திரி பதவியை பிடிப்பதில், ஏக்நாத் ஷிண்டேவுக்கும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இதனால், முதல் மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், தானே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, " மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன் நாள்தோறும் 2-3 மணி நேரமே நான் தூங்கினேன். மாநிலம் முழுவதும் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

நான் எப்போதும் தொழிலாளியாக கருதியே பணியாற்றி வருகிறேன். என்னை முதல் மந்திரியாக கருதவில்லை. சிஎம் என்றால் காமன் மேன் என்றே கருதுகிறேன். புகழ்பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும். இது தொடர்பாக நான் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரிடம் நேற்று தொலைபேசியில் பேசினேன். அடுத்த முதல் மந்திரி யார் என்பதை முடிவு செய்யச் சொன்னேன். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்"என்றார்.


Next Story