மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

போலீசார் ஹிமன்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் தொனபல் கிராமத்தை சேர்ந்த தம்பதி படிபந்து சாஹு (வயது 81), சாந்தி சாஹு (வயது 72). இந்த தம்பதிக்கு ஹிமன்ஷா (வயது 55) என்ற மகன் உள்ளார். ஆட்டோ டிரைவரான ஹிமன்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான ஹிமன்ஷா அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்ததால் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனியே வசித்து வருகிறார்.
இதையடுத்து, ஹிமன்ஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பெற்றோர் வீட்டில் வசித்தபோதும் அங்கும் ஹிமன்ஷா மதுகுடித்துவிட்டு போதையில் வந்துள்ளார். இதனால், பெற்றோருக்கும் ஹிமன்ஷாவுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிமன்ஷா நேற்று இரவு வீட்டிற்கு மதுகுடித்துவிட்டு வந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹிமன்ஷா வீட்டில் இருந்த சுத்தியலை கொண்டு பெற்றோரை அடித்துக்கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், இரவு முழுவதும் உயிரிழந்த பெற்றோர் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து காலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஹிமன்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






