அசாமில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது சில்கூரி என்ற இடத்துக்கு அருகே சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 'ஹெராயின்' போதைப்பொருள் மற்றும் 'யாபா' என அழைக்கப்படும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.