காதல் கணவருடன் தகராறு... 5 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற தாய்


காதல் கணவருடன் தகராறு... 5 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற தாய்
x

கடந்த 2 ஆண்டுகளாக ஜெயராம் வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.ஜி.லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 29). இந்த தம்பதிக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 5 வயதில் ஸ்ரீ என்ற மகள் இருந்தாள். ஜெயராம், மகாலட்சுமி ஆகியோர் காதலித்து திருமணம் செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜெயராம் வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. பின்னர் ஜெயராம் வெளியே சென்று விட்டார்.

அப்போது வீட்டில் இருந்த மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகாலட்சுமி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடினார்.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மகாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது மகளை மகாலட்சுமி கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story