சபரிமலை வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு: ரூ.5 லட்சம் நிவாரணம் - தேவஸ்தானம் நடவடிக்கை


சபரிமலை வந்த பக்தர் திடீர் உயிரிழப்பு:  ரூ.5 லட்சம் நிவாரணம் - தேவஸ்தானம் நடவடிக்கை
x

கோப்புப்படம்

உயிரிழந்த பக்தர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் தினமும் 18 மணி நேரம் தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி (வயது 49) என்ற பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி சென்று கொண்டிருந்தார். நீலிமலை என்ற இடத்தை சென்றடைந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவர் அங்குள்ள இதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகாச்சாரி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு உதவி வழங்கப்படும் என்றும் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி முருகாச்சாரி குடும்பத்திற்கு உடனடியாக ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை திருவிதாங்கூர் தேவஸ்தானம் எடுத்து வருகிறது.


Next Story