இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x

File image

தினத்தந்தி 5 Aug 2024 10:40 AM GMT (Updated: 5 Aug 2024 11:58 AM GMT)

மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேவேளை, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.

அந்த வகையில் அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரிய மனு இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா கூறுகையில், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் சிபிஐ கைது செய்ததாக கூற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.


Next Story