டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - காங்கிரஸ் வாக்குறுதி


டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை - காங்கிரஸ் வாக்குறுதி
x

காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பணியாற்றி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது. 8-ந் தேதி, வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, தேசிய இளைஞர் தினத்தையொட்டி, இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 'யுவ உதான் யோஜனா' என்ற பெயரிலான வாக்குறுதியை வெளியிட்டது.

அப்போது, டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மியும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் ஒருவரையொருவர் குற்றம் சொல்கிறார்கள். மக்களை மறந்து விட்டனர். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காக பணியாற்றி வருகிறது. மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, ஒரு வாக்குறுதியை உருவாக்கி இருக்கிறோம். அதாவது, டெல்லியில் ஆட்சி அமைத்தவுடன், டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.8,500 வழங்கப்படும். ஓராண்டு காலத்துக்கு பயிற்சியுடன் இத்தொகை வழங்கப்படும். நிதியுதவி அளிப்பதுடன், அந்த இளைஞர்கள் எந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்களோ, அதிலேயே அவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கப்படும். நாங்கள் சொல்வதை செய்வோம் என்று மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story