டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீதான அவதூறு வழக்கு விசாரணை எப்போது...வெளியான தகவல்
![டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீதான அவதூறு வழக்கு விசாரணை எப்போது...வெளியான தகவல் டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீதான அவதூறு வழக்கு விசாரணை எப்போது...வெளியான தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37900123-atishisanjay.webp)
டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் புதுடெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் பாஜகவிடமிருந்து கோடிக்காணக்கான ரூபாய் வாங்கியது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததாகவும் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் அதிஷி மற்றும் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று கூடுதல் தலைமை நீதிபதி பராஸ் தலால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகார் மீதான விசாரணை குறித்து வாதிட நேரம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் தீட்சித் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.