உணவு பரிமாற தாமதம்; நின்று போன திருமணம்... மணமகனின் அடுத்த முடிவால் அதிர்ச்சி


உணவு பரிமாற தாமதம்; நின்று போன திருமணம்... மணமகனின் அடுத்த முடிவால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 30 Dec 2024 4:11 AM IST (Updated: 30 Dec 2024 4:38 AM IST)
t-max-icont-min-icon

உணவு பரிமாற தாமதம் ஏற்பட்ட கோபத்தில் திருமணமே வேண்டாம் என ரத்து செய்த மணமகன் அதே நாளில் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் சந்தவுளி நகரில் மணமக்களுக்கு திருமணம் செய்ய முடிவானது. இதில், மணமகள் வீட்டில் உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்ட ஆத்திரத்தில், இந்த திருமணமே வேண்டாம் என்று அதனை மணமகன் ரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர் போலீசாரை அணுகினர். கடந்த 22-ந்தேதி திருமணம் ஊர்வலம் நடந்தது. மணமகனை அழைத்து கொண்டு ஹமீத்பூர் கிராமத்தில் உள்ள மணமகள் இல்லத்திற்கு சென்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து மணமகள் கூறும்போது, மெஹ்தாப் உடன் திருமணம் செய்வது என 7 மாதங்களுக்கு முன்பு முடிவானது.

திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டபடி மணமகன் மற்றும் அவருடைய வீட்டார் வந்தனர். சாப்பிட்டனர். அதன்பின்னர் என்னுடைய பெற்றோரை திட்டி விட்டு, தாக்கி விட்டு சென்றனர். நீதி வேண்டி நான் போலீசிடம் சென்றேன் என கூறியுள்ளார்.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சாப்பிட உட்கார்ந்தனர். மெஹ்தாப்புக்கு உணவு வழங்க சிறிது காலதாமதம் ஏற்பட்டது. அப்போது, அவருடைய நண்பர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்தனர். இதனால், மெஹ்தாப்பும், அவருடைய குடும்பத்தினரும் என்னுடைய பெற்றோரையும், உறவினரையும் திட்டினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கிராமத்தில் இருந்த வயதில் மூத்தவர்கள் தீர்வு காண முயன்றனர். ஆனால், மெஹ்தாப் திருமணம் செய்ய மறுத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதே நாளில் உறவுக்கார பெண் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

இதனால் மணமகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. திருமண ஏற்பாடுகளுக்காக ரூ. 7 லட்சம் செலவு, மணமகன் ஊரை சேர்ந்த விருந்தினர்கள் 200 பேருக்கு உணவு பரிமாறியது என்பதுடன், திருமணத்திற்கு முன்பு மணமகன் குடும்பத்தினருக்கு ரூ1..5 லட்சம் ரொக்க பணம் கொடுக்கப்பட்டது என மணமகள் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது என வட்ட அதிகாரி ராஜேஷ் ராய் கூறியுள்ளார்.


Next Story