பிரசாரத்தின்போது அவதூறு பேச்சு: மோடிக்கு எதிரான வழக்கு ரத்து


பிரசாரத்தின்போது அவதூறு பேச்சு: மோடிக்கு எதிரான வழக்கு ரத்து
x
தினத்தந்தி 17 July 2024 6:58 AM GMT (Updated: 17 July 2024 7:15 AM GMT)

முஸ்லிம் சமுகம் பற்றி அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

பெங்களூரு,

பிரசாரத்தின்போது முஸ்லிம் சமூகம் பற்றி அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை பெங்களூரு கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

நாடாளுமன்றத்துக்கான பொது தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பிரதமராக மீண்டும் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி பாதையில் இயங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்கள் வாக்காளர்களுக்காக பிரசாரம் செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அவர்கள் நாட்டின் வளங்களை முஸ்லிம் சமூகத்திற்கு பிரித்து கொடுப்பார்கள் என கூறி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மோடிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ரகுமான் என்பவர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது பிரதமர் மோடி ஒரு சமூகத்தை தாக்கி பேசி உள்ளார்.

அவரது கருத்து முற்றிலும் தவறானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி சிவக்குமார், இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அப்போது பிரதமர் மோடியின் பேச்சு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்.


Next Story