புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு


புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
x
தினத்தந்தி 26 March 2025 9:48 AM (Updated: 26 March 2025 11:41 AM)
t-max-icont-min-icon

நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் பல அறிவிப்புகளை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். இதன்படி நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும்.

2025-26 ஆம் கல்வியாண்டு சி.பி.எஸ்.சி. பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை சிற்றுண்டி வாரம் இரு நாட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி டிராக்கிங் ஸ்மார்ட் அடையாள அட்டை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.

புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தெரு விளக்குகளும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் 500 பள்ளிகளில் பெண் பிள்ளைகள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும்.

காவல் துறையில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சீருடைபடி இந்த மாதத்திற்குள் வழங்கப்படும். பள்ளிக் கல்வியில் உள்ளது போல், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பாரதிதாசன் பெண்கள் கல்லூரி, புதுவை பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து நகர, கிராமப்புற கல்லூரிகளுக்கும் இலவச பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியிலும் இலவச பஸ் இயக்கப்படும். சென்டாக் மூலம் விண்ணப்பிக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.

புதுச்சேரியில் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 2007/08 வரை வழங்கப்பட்டது. அதற்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. வரும் நிதியாண்டில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024/25ஆம் ஆண்டு வரை விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை ரூ.9.38 கோடி ஆகும். இதன் மூலம் பதக்கம் வென்ற 1840 விளையாட்டு வீரர்கள் பயனடைவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.


Next Story