பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு


பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Oct 2024 12:29 PM IST (Updated: 18 Oct 2024 1:22 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

பாட்னா,

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள கடை ஒன்றில் சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்த 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேரும், சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

உயர் சிகிச்சைக்காக 13 பேர் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், 30 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக சென்று கிராம மக்களின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பீகார் அரசின் மதுபான தடை கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே சமயம், இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் எனவும் பீகார் துணை முதல்-மந்திரி விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.


Next Story