பாலியல் வழக்கில் விடுதலையான சில நாட்களில் குடும்பத்தினரை கொன்று தற்கொலை செய்த நபர்

சிறையில் இருந்து விடுதலையான சில நாட்களில் மனைவி, மகளை கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தி மாவட்டம் பமுனிமைதான் பகுதியை சேர்ந்தவர் ஜுலி டிகா (வயது 42). இவருக்கு 15 வயது நிரம்பிய மகள் உள்ளார். இதனிடையே, ஜுலி டிகா முதல் கணவரிடமிருந்து பிரிந்து லோகித் தகுரியா (வயது 47) என்ற நபரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். ஜுலி தனது கணவர் லோகித் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே, ஜுலியின் மகளுக்கு லோகித் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ஜுலி அளித்த புகாரின் அடிப்படையில் லோகித்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்குமுன் விடுதலையானார். அதேவேளை, லோகித்திற்கும் ஜுலிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது. அந்த வகையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஜுலிக்கும், லோகித்திற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லோகித் மரக்கட்டையால் ஜுலியை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜுலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் அடங்காத லோகித் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜுலியின் மகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு லோகித் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காலை தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






