மோந்தா புயல் முன்னெச்சரிக்கை; ஆந்திர முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு


மோந்தா புயல் முன்னெச்சரிக்கை; ஆந்திர முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு
x

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும்.

புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. தொடர்ந்து காலை 8.15 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டிருந்த புயல், அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் புயல் நிலவரம் குறித்து பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து பணிகளை மேற்பார்வையிட ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி நரலோகேஷுக்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

1 More update

Next Story