டானா புயல் எதிரொலி: 150க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து


டானா புயல் எதிரொலி:  150க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து
x

டானா புயல் நாளை மறுநாள் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 21-ந் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது. மேலும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'டானா' என பெயரிடப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கு தெற்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், வங்காளதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு- தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

பின்னர் இது ஒடிசாவின் பூரிக்கும், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் அதிகாலையில் கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மேற்கு வங்காளத்தின் கடற்கரையொட்டி மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், பர்பா மற்றும் பஸ்சிம், மெதினிபூர், ஜார்கிராம், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் 24 மற்றும் 25- ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரெயில்வே வரம்பிற்கு உட்பட்டு இயக்கப்படும் 150 க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் மின்சார ரெயில்கள் 24-ம் தேதி இரவு 8 மணி முதல் 25-ம் தேதி காலை 10 மணி வரை இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'டானா' புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்துக்கு நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story