எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி..? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், சமூக நீதி, ஜனநாயகம் காக்க வாக்களித்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, "எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்த இடங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்" என்று கூறினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் உள்ளடக்கிய காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.