3 நாட்களில் 3வது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றம்


3 நாட்களில் 3வது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றம்
x
தினத்தந்தி 12 Jun 2024 6:46 AM GMT (Updated: 12 Jun 2024 8:06 AM GMT)

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈட்டுப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தின் சத்தர்கல்லா பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடியின் மீது இன்று அதிகாலை 1.45 மணியளவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சி.ஆர்.பி.எப் வீரர் கொல்லப்பட்டார். மேலும் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர். இதில் காயமடைந்த வீரர்களை அருகில் இருந்த மற்ற வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, தோடா மாவட்டம் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று ஜம்முவின் கதுவா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது 2 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி தப்பியோடிய நிலையில் அவரை டிரோன் மூலம் பாதுகாப்புப்படையினர் தேடி வருகின்றனர்.

இதேபோன்று, கடந்த 10ம் தேதி ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3 முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story