'புஷ்பா 2' பார்க்க வந்து போலீசிடம் சிக்கிய குற்றவாளி
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாக்பூர்,
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் தொடர்ச்சியாக தற்போது 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்த்துக்கொண்டிருந்த விஷால் மேஷ்ரம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஷால் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் தியேட்டருக்கு வருவதை தெரிந்துகொண்ட போலீசார் அவரின் காரை பஞ்சராக்கி விட்டு, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது கைது செய்துள்ளனர்.