சர்ச்சை பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ்


சர்ச்சை பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ்
x

அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்துக்கு நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சித்தார். அதாவது, 'அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அம்பேத்கர் குறித்த எனது கருத்துகள் திரித்து கூறப்பட்டு உள்ளன என்று மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்தார். மேலும் மக்களை தவறாக வழிநடத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களிலும் எனது கருத்துகளை மட்டுமின்றி, பிரதமர் மோடியின் கருத்துகளை கூட திரித்துக்கூறி இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதில், இது குறித்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்றும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story