இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு


இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ,  இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
x

இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது.

புதுடெல்லி,

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.

இஸ்ரேலின் இந்த பயங்கர தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பாதுகாப்பு நிபுணர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ராணுவ தளவாடங்களும் மிகப்பெரும் சேதமடைந்தன.

மேலும் டெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிகிறது. இதனால் ஈரானில் பரவலாக பெருத்த சேதம் விளைந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்கி வருகிறது.

இதில் பலவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்த நிலையில், அதையும் தாண்டி சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தங்கள் இலக்கை தாக்கின.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.

உதவி எண்கள் விவரம்:-

1800118797

91-11-23012113

91-11-23014104

91-11-23017905

91-9968291988

டெஹ்ரானில் உள்ள இந்தியர்களுக்காக 24x7 அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

+98 9128109115

+98 9128109109

இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story