காரில் மதுபானம் குடித்த 2 பேரை கண்டித்த கான்ஸ்டபிள் டெல்லியில் படுகொலை; 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லியில் காரை ஏற்றி கான்ஸ்டபிள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் நங்லோய் பகுதியில் நள்ளிரவில் கார் ஒன்றில் 2 பேர் அமர்ந்தபடி மதுபானம் குடித்து கொண்டு இருந்துள்ளனர். அந்த வழியே வந்த கான்ஸ்டபிள் சந்தீப் மாலிக் இதனை பார்த்ததும், அவர்களை கண்டித்துள்ளார்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் போதையில், சந்தீப்பின் பைக் மீது காரை கொண்டு ஏற்றினர். 10 மீட்டர் தொலைவுக்கு பைக்கை காருடன் இழுத்தபடி சென்றுள்ளனர். இதனை எதிர்பாராத சந்தீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சந்தீப்பை மற்ற போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என போலீசாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய காட்சி ஒன்று அதிகாலை 2.15 மணியளவில் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் டிஸ் ஹசாரி கோர்ட்டில் 3 நாட்களுக்கு முன் 400 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தர்மேந்தர் (வயது 39) மற்றும் ரஜ்னீஷ் (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர ஜிதேந்தர் மற்றும் மனோஜ் ஷேர்மேன் 2 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
கான்ஸ்டபிள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நீதியை உறுதி செய்யும் வகையில் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு சந்தீப்பை நன்றாக தெரியும் என்றும் அவர்கள் வசித்த பகுதியிலேயே 2 பேரும் வசித்து வருகின்றனர் என்றும் விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.