'அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை' - ராஜ்நாத் சிங்


அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை - ராஜ்நாத் சிங்
x

அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பல்கர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்பது பற்றி தேர்தல் சமயங்களில் எப்போதும் பேசுகிறது. ஆனால் மத்தியில் அவர்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்தும் வறுமையை அவர்களால் ஒழிக்க முடியவில்லை. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, தற்போது வரை 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை. பா.ஜ.க.வின் அரசியலுக்கான அடிப்படை என்பது நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகும். நாம் எப்போதும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே, வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க முடியும்.

காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு என்றுமே மரியாதை கொடுத்ததில்லை. பிரதமர் மோடி 'பாரத ரத்னா' விருது வழங்கி அம்பேத்கரை கவுரவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசி மக்களிடையே ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்."

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story