பீகாரை காங்கிரஸ் நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது - பிரதமர் மோடி

பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்
பாட்னா,
பிரதமர் மோடி இன்று பீகார் சென்றுள்ளார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பீகார்
முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உள்பட பலர் கலந்துகொண்டனர். பீகாரில் ஐக்கிய ஜனாதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினேன். எனது வெளிநாட்டு பயணத்தின்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர். உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என நினைக்கின்றனர். நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிபெற பீகாரின் பங்கு முக்கியம். பீகாரில் காட்டாச்சியை கொண்டுவந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். உங்கள் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பீகாரின் வளர்ச்சி பயணத்தை தடுக்க சிலர் தயாராக உள்ளனர்.
பீகாரை காங்கிரஸ் அரசு நீண்டகாலம் ஏழ்மையில் வைத்திருந்தது. தலித், பிற்படுத்தப்பட்டோர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டனர். வறுமையை ஒழிப்பதாக கூறி மக்களை ஏமாற்றி சில குடும்பத்தினர் கோடீஸ்வரர்களாக மாறினர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் நடவடிக்கைகள் பீகாருக்கு எதிரானது, பீகாரில் முதலீடுகளுக்கும் எதிரானது. ஆப்பிரிக்காவிலும் தற்போது பீகார் புகழ்பெற்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசால் கைவிடப்பட்ட சரண் மாவட்டத்தில் தற்போது தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது' என்றார்.






