ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு


ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 July 2024 11:07 AM IST (Updated: 8 July 2024 12:43 PM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக கடந்த 4ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தநிலையில், அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். இது கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் முதல்-மந்திரி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் ஹேமந்த் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த 4-ந் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்பட கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஜே.எம்.எம். கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1 எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.


Next Story