டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 12-ம் வகுப்பு மாணவர் கைது


டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 12-ம் வகுப்பு மாணவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2025 2:37 PM IST (Updated: 10 Jan 2025 3:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12-ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், பள்ளி வளாகங்களில் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடிகுண்டு இருப்பதாகவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருப்பர்; மற்ற ஆசிரியர்களும் அதிகாரிகளும் பள்ளியைச் சுற்றி வருவர் என்பதாலும் இழப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, மின்னஞ்சலில் பெறப்பட்ட அச்சுறுத்தல் புரளி எனத் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் இ-மெயில் அனுப்பியவருக்கு பள்ளிகளில் தேர்வு அட்டவணை குறித்தும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. மேலும், இ-மெயில் குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் அனுப்பியது 12 ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story