சிகரெட் புகை, மூச்சு திணறிய குழந்தை... இளம்பெண் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்


சிகரெட் புகை, மூச்சு திணறிய குழந்தை... இளம்பெண் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்
x
தினத்தந்தி 17 Jun 2024 11:27 PM GMT (Updated: 17 Jun 2024 11:42 PM GMT)

நெட்டிசன்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்திய விசயம் என்னவென்றால், சிகரெட் பிடித்த அந்த இளம்பெண் கையில் குழந்தையுடன் வீடியோவில் காணப்படுகிறார்.

புதுடெல்லி,

சமூக ஊடகத்தில் ரீல்ஸ், வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் பலவித முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக ஆபத்து விளைவிக்கும் செயல்களில் கூட அவர்கள் ஈடுபடுகின்றனர். இதற்கு பலர் பலியாகவும் செய்கின்றனர்.

செல்பி மோகத்தில் இருந்து வந்த மக்கள் அதில் இருந்து சற்று முன்னேறி, ரீல்ஸ் வெளியிடுவதில் ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவர், பாட்டு படித்தபடி, சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், மக்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்திய விசயம் என்னவென்றால், அந்த இளம்பெண் கையில் குழந்தையுடன் வீடியோவில் காணப்படுகிறார்.

அந்த குழந்தைக்கு சிகரெட் புகையின் நெடியால் சற்று மூச்சு திணறி, இருமல் ஏற்படுகிறது. அப்போதும், வீடியோ எடுக்கும் ஆர்வத்தில், அழகாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில், புன்னகைத்தபடி அந்த இளம்பெண் காட்சி தருகிறார்.

இந்த வீடியோவை, சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளரான தீபிகா நாராயண் பரத்வாஜ் என்பவர் பகிர்ந்து உள்ளார். அதில், இந்த ரீல் அரக்கர்களிடம் குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளனர். அது பயங்கர உணர்வை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவு வெளியானதும், லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு, விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், குழந்தைக்கு இருமல் ஏற்படுகிறது. சிகரெட் புகையால் அதற்கு அசவுகரியம் ஏற்படுவது நன்றாக தெரிகிறது. குழந்தை தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இது உண்மையில் ஒரு குற்றம். அந்த இளம்பெண் மீது வழக்கு பதிய வேண்டும் என மற்றொருவரும், முட்டாள்தனத்தின் உச்சம் என இன்னொருவரும் தெரிவித்து உள்ளனர்.


Next Story