திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு


திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Sept 2024 12:09 PM IST (Updated: 20 Sept 2024 3:19 PM IST)
t-max-icont-min-icon

சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.

அமராவதி,

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமராவதியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தினார்கள். தற்போது தூய நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிலில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோவிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தியுள்ளார். திருப்பதி கோவில் பிரசாதம் குறித்து சந்திரபாபு கூறிய கருத்து மிகவும் மோசமானது. எந்த நபரும் இதுபோன்ற வார்த்தைகளை பேசவோ அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறவோ மாட்டார்கள்.

சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா?" என்று கூறியுள்ளார்.


Next Story