பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ. 944 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
டெல்லி,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
பெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே, பெஞ்சல் புயல், கனமழை, வெள்ள பாதிப்புகளை சீரமமைக்க உடனடி நிவாரணமாக தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு 994.80 கோடி ரூபாய் விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலக்களுக்கு ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்களுடன் மோடி அரசு தோளோடு தோள் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.