பெண் டாக்டர் கற்பழித்து கொலை: மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனை முன்னாள் முதல்வர்
நிதி முறைகேடுகள் தொடர்பாக மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வரின் வீடு உள்பட 15 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த இளநிலை பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதனிடையே பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக சந்தீப் கோஷ் இருந்தபோது கல்லூரியில் நடந்த பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது. இது குறித்து கல்லூரியின் முன்னாள் துணை சூப்பிரண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, இந்த விசாரணையையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது.
அதன் பேரில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் இருந்து பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள், நிதி முறைகேடுகள் தொடர்பாக மறுவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கினர். இந்த சூழலில் நிதி முறைகேடு வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதன்படி சந்தீப் கோசின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர்கள் தவிர மருத்துவக் கல்லூரியின் தடயவியல்-மருத்துவ துறையின் பேராசிரியர் ஒருவரின் வீடு, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களின் வீடு என மேலும் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிக்கி உள்ளார். இதன்படி கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.