கோவிலுக்கு சென்றபோது கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

விலங்கின் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் வாகனத்தை திருப்பினார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். பீவர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது விலங்கு ஒன்று சாலையை கடக்க முயன்றதால் கார் டிரைவர் விலங்கின் மீது மோதுவதை தவிர்க்க வாகனத்தை திருப்பினார். இதில் எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து பலமுறை உருண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் புக்ராஜ் குமாவத் (42), அவரது மனைவி பூஜா (38) மற்றும் அவர்களது மகன் யஷ்மித் (6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 7 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






