"அரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது.." - ஜெய்ராம் ரமேஷ்
அரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அங்கு தற்போது காட்சிகள் மாறியுள்ளன.
90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. தற்போது அங்கு பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. கிட்டத்தட்ட பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை பா.ஜ.க. அரியானாவில் ஆட்சி அமைத்தால் அது வரலாற்று சாதனையாக அமையும். இதன்படி தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அரியானா தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி. இது அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானது. தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. அரியானாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. இது வெளிப்படையான ஜனநாயக செயல்முறைகளுக்கு கிடைத்த தோல்வி" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.