இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க டெல்லி வந்த பிரிட்டன் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்

பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் டெல்லியில் தனது இன்ஸ்டாகிராம் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
புதுடெல்லியை சேர்ந்தவர் கைலாஷ். சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் இவருக்கு பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வர பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் விருப்பப்பட்டார். இதன்படி, மராட்டிய மாநிலத்திற்கு வந்த அவர், அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு கோவாவிற்கு சென்றார்.
பின்னர் தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க விரும்பிய பிரிட்டன் பெண், அவரை அழைத்துள்ளார். தன்னால் அவ்வளவு தூரம் வர முடியாது எனக்கூறிய கைலாஷ், பிரிட்டன் பெண்ணை டெல்லிக்கு அழைத்துள்ளார். கைலாஷின் விஷமத்தனம் தெரியாமல் டெல்லிக்கு வந்த பிரிட்டன் இளம்பெண் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் டெல்லிக்கு வந்த தகவலை தனது நண்பர் கைலாஷுக்கு கூறியுள்ளார். இதையடுத்து, கைலாஷ் தனது நண்பர் வாசிம் என்பவரை அழைத்துக்கொண்டு பிரிட்டன் பெண்ணை சந்தித்துள்ளார். மேலும், நண்பர்கள் இருவரும் சேர்ந்து பிரிட்டன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டன் பெண், காலையில் மஹிபால்புரில் உள்ள காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரிட்டன் தூதரகத்திற்கும் தகவல் கொடுத்தனர். மேலும், கைலாஷ் மற்றும் அவரது நண்பர் வாஷிமையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கைலாஷ், சரியாக ஆங்கிலம் தெரியாத நிலையிலும் பிரிட்டன் பெண்ணுடன் கூகுள் டிரன்ஸ்லேட் மூலம் வார்த்தைகளை மொழி பெயர்த்து உரையாடி வந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த இளம்பெண், இன்ஸ்டகிராம் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.