பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கைது - எஸ்.ஐ.டிபோலீசார் தீவிர விசாரணை


பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கைது - எஸ்.ஐ.டிபோலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Jun 2024 9:50 AM IST (Updated: 10 Jun 2024 9:51 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோக்கள் வெளியானதில் முக்கிய காரணமாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எஸ்.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர்,

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகத்தில் முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த சில நாட்களுக்கு முன்பாக பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் ஹாசன் மாவட்டத்தில் வெளியானது. இந்த ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு மேலாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்து கடந்த மாதம் (மே) 31-ந் தேதி பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை, அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்தான் வெளியிட்டதாக கூறப்பட்டது. ஏனெனில் அந்த பென் டிரைவை பா.ஜனதாவை சேர்ந்த வக்கீலான தேவராஜ் கவுடாவிடம் கொடுத்ததாக கார்த்திக் கூறியிருந்தார். ஆனால் தேவராஜ் கவுடா அந்த வீடியோக்களை வெளியிடவில்லை என்று கூறி இருந்தார். இதையடுத்து, ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஹாசன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் கார் டிரைவர் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

ஆனால் ஆபாச வீடியோ வெளியாக காரணமாக இருந்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கு எஸ்.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்ட பின்பும் ஆபாச வீடியோக்கள் வெளியாக காரணமாக இருந்த கார்த்திக் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹாசன் மற்றும் மைசூரு மாவட்டங்களில் எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையையொட்டி பதுங்கியிருந்த கார்த்திக்கை எஸ்.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரை, ஹாசனில் இருந்து உடனடியாக போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன்மூலம் 47 நாட்கள் தலைமறைவாக இருந்த கார்த்திக் கைதாகி உள்ளார். அவரிடம் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை யாருக்கெல்லாம் வழங்கினார்?, வீடியோக்கள் வெளியானதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து எஸ்.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story