நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
x

தொடர் அமளி காரணமாக நடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்துள்ளார்

இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதையடுத்து, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சாரோசின் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஜார்ஜ் சாரோஸ் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக அவரது நிறுவனத்துடன் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் இன்று கோரிக்கை விடுத்தது.

அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்களும், ஜார்ஜ் சாரோஸ் நிறுவனத்திற்கும் சோனியா காந்திக்கும் இடையேயான தொடர்பை விசாரிக்க வேண்டுமென பாஜக தலைமையிலான கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

அவை தொடங்கியதும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 12 மணி வரை, 2 மணி வரை, 3 மணி வரை என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 3 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story