சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்த நிறுவனம்; தற்கொலை செய்த என்ஜினீயர்

பெங்களூருவில் பிரபல மின்சார பைக் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல மின்சார பைக் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில் ஹொமொலொகேஷன் பிரிவில் என்ஜினீயராக அரவிந்த் (வயது 38) என்பவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்நிறுவனத்தின் தலைவர் பஹ்வேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் தொல்லை கொடுத்துள்ளனர். அரவிந்திற்கு வேலைப்பளுவை அதிகரித்ததுடன் அவருக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அரவிந்த் கடந்த மாதம் 28ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அரவிந்த் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து அவரது வங்கி கணக்கில் 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அரவிந்தின் சகோதரன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். மேலும், அரவிந்தின் அறையில் சோதனை நடத்தியதில் அவர் தற்கொலை செய்வதற்குமுன் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடித்தத்தில் தனது தற்கொலைக்கு மின்சார பைக் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் பஹ்வேஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. மேலும், தனக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் மற்றும் அரவிந்தின் சகோதரன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






