படுத்த படுக்கையான மகள்... போதிய வருமானம் இல்லை... தாய் எடுத்த கோர முடிவு
பிந்துவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் லீலா (வயது77). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். லீலாவுக்கு பிந்து (45) என்ற மகளும், 2 மகன்களும் இருந்தனர். இவர்களில் ஒரு மகன் அண்மையில் விபத்தில் மரணம் அடைந்தார். மற்றொரு மகன் தனியாக வசித்து வருகிறார்.
மகள் பிந்துவுக்கு திருமணமாகி கணவனை இழந்த நிலையில் தற்போது தாய் லீலாவுடன் வசித்து வந்தார். பிந்துவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். இவருக்கு தாய் லீலா தான் பணிவிடைகள் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாமல் லீலாவின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வந்தது. இதனால் மனமுடைந்த லீலா மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லீலா மனதை கல்லாக்கி கொண்டு கத்தியால் மகள் பிந்துவின் கழுத்தை அறுத்தார். அவர் வலியால் அலறி துடித்த நிலையில் லீலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அக்கம் பக்கத்தினர் நெய்யாற்றின்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிந்துவை மீட்டு நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து லீலாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெய்யாற்றின்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமையின் கோரப்பிடியில் வறுமை வாட்டியதால் உடல் நலம் குன்றிய மகளின் கழுத்தை அறுத்து விட்டு மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.