'இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்காளதேச அரசு வேடிக்கை பார்க்கிறது' - ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்காளதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்காளதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்காளதேசத்தில் இந்து மத அமைப்பின் தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலையளிப்பதாகவும், அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்காளதேசத்தில் மொத்தம் உள்ள 17 கோடி மக்கள் தொகையில், 8 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். அங்கு கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற பின்னர் அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது 200-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்காளதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வங்காளதேசத்தில் இந்துக்கள், பெண்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள், தீ வைப்பு மற்றும் மனிதாபிமானமற்ற கொடுமைகள் மிகவும் கவலையளிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதை கண்டிக்கிறது.
இந்த தாக்குதல்களை தடுப்பதற்கு பதிலாக வங்காளதேச அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஆன்மிக தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் வங்காளதேச அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டது நியாயமற்றது. இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சின்மய் கிருஷ்ண தாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வங்காளதேச அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
மேலும் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுக்க இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளை தொடர வேண்டும் என்றும், இது தொடர்பான உலகளாவிய கருத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இந்த நேரத்தில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் வங்காளதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். உலக அமைதிக்கும், சகோதரத்துவத்திற்கும் இது மிகவும் அவசியமாகும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.