ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரபல யு.பி.எஸ்.சி. ஆசிரியர்
யு.பி.எஸ்.சி. பயிற்சி வீடியோக்கள், அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த அதிரடியான கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஓஜா.
புதுடெல்லி:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்நிலையில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியில், பிரபல யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜா இணைந்துள்ளார். டெல்லியில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
கல்வித் துறையில் பணியாற்றிக்கொண்டு அரசியலில் நுழைய வாய்ப்பு வழங்கிய ஆம் ஆத்மி கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்தார் அவத் ஓஜா. மேலும் நாட்டில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது முக்கிய இலக்கு என்றும் கூறினார்.
ஓஜாவின் அரசியல் பிரவேசம், கல்வித் துறைக்கு நன்மை அளிப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஓஜா, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி மத்திய அரசுப் பணியில் சேர முடிவு செய்தார். ஆனால் அந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் வேறு வேலைக்கு போக பிடிக்காமல், யு.பி.எஸ்.சி. பயிற்சி துறைக்குள் நுழைந்து, ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் டெல்லி முகர்ஜி நகரில் சொந்தமாக பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். 2019-ம் ஆண்டு புனே நகரில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை தொடங்கினார்.
யு.பி.எஸ்.சி. பயிற்சி வீடியோக்கள், அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்த அதிரடியான கருத்துகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஓஜா. இவர் தனது மாணவர்களுக்கு கற்பிக்கும் போது வரலாறு, நடப்பு விவகாரங்கள் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றை இணைத்து கற்பிக்கிறார்.
மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் களப்பணியாற்றி வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு அவத் ஓஜாவின் வருகை மேலும் வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.