இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி; ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு


இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி; ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Nov 2024 5:38 PM IST (Updated: 21 Nov 2024 5:46 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி ஒரு நாடகத்தை தொடங்கி, பொருளாதாரத்தை குறிவைக்க முயற்சிக்கிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுவதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

2002 முதல் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மோடியின் புகழைக் கெடுக்க முயன்று வருகின்றனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளைப் பொருத்தவரை அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து "சட்டம் தன் கடமையை செய்யும்".

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகள் செய்துள்ளது. சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் முறையே பூபேஷ் பாகல் மற்றும் அசோக் கெலாட் தலைமையில் அரசுகள் இருந்தபோது ரூ.25 ஆயிரம் கோடி மற்றும் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

திமுக ஆளும் தமிழகத்திலும் முதலீடு செய்துள்ளது, மேலும் சமீபத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறது. அதானி "ஊழல்" என்றால், காங்கிரஸ் அரசு ஏன் அவரது நிறுவனத்திடம் முதலீடு தேடுகிறது .

மோடி பிரதமராக இருப்பதால், இந்தியப் பொருளாதாரம் வலுவடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் கூறி இந்திய பொருளாதாரத்தை குறிவைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருகிறார். இன்று கூட முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததால் நிறைய பணத்தை இழந்துள்ளனர்.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக ராகுல்காந்தி பா.ஜ.க. அரசாங்கத்தை குறிவைத்தார். பின்னர் கோவிட் தடுப்பூசிகள் விவகாரத்தை கிளப்பினார். ராகுல் காந்தி ஒரு சில ஆலோசகர்களால் தனக்கு சொல்லப்பட்டதைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்கும் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒரு நாடகத்தை தொடங்கி, பொருளாதாரத்தை குறிவைக்க முயற்சிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story