மராட்டியம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்பது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை


தினத்தந்தி 22 Nov 2024 5:33 PM IST (Updated: 22 Nov 2024 6:14 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற 26-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி (நேற்று முன்தினம்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. மராட்டியத்தில் உள்ள 9.70 கோடி வாக்காளர்களில், 66 சதவீதம் பேர் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். 288 தொகுதிகளில் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதேபோல மராட்டியத்துடன் சேர்த்து ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தமுள்ள 81 இடங்களில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து மீதமுள்ள 38 இடங்களுக்கு நவம்பர் 20-ம் தேதி (நேற்று முன்தினம்) தேர்தல் நடந்தது.

முதல்கட்ட தேர்தலைப்போல நேற்றைய முன் தினம் 2-ம் கட்ட வாக்குப்பதிவிலும் மக்களிடையே பெரும் ஆர்வம் காணப்பட்டது. வாக்குச்சாவடிகளுக்கு அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்து சென்றனர். இதனால் அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 67.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இந்தநிலையில் இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ந்தேதி(நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை மாலைக்குள் இரு மாநிலத்திலும் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற நிலவரம் தெரிந்துவிடும்.

அந்தவகையில் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகி வருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது.

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 தொகுதிகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளும் தேவை. இந்நிலையில், மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் இரு மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியை பிடிக்கிறது என்று கூறியுள்ளது.

மராட்டியத்தில், பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சில கருத்துக் கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கணிப்புத்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக அமைந்திருக்கிறது. ஆனால், மக்களின் எண்ணங்களை இந்த கருத்துக் கணிப்புகள் உண்மையிலேயே கணித்திருக்கின்றதா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய யாராலும் இயலாது.

ஜார்கண்டில் பெரும்பாலான கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நாளை மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார்? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும் என்றே எதிர்பார்க்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் ஹேமந்த் சோரன் கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story