காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு


காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு
x

காஷ்மீரில் தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூஞ்செயலில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் மறைமுக உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் போலீசார் காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள்.

இந்த தேடுதல் வேட்டையின்போது புல்வாமா மற்றும் அனந்தநாக் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அடில் உசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரது வீடுகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீடுகளில் இருந்த குண்டுகள் வெடித்தது. இதில் அந்த வீடுகள் தரைமட்டமாகின. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அடில் உசேன் தோகர் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு நடந்த தேடுதல் வேட்டையின்போது புல்வாமா மாவட்டத்தின் முரான் பகுதியில் அக்சன் உல் ஹக் ஷேக் வீடும், சோபியான் மாவட்டத்தின் சோதிபோராவில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதியான ஷாஹித் அகமது குட்டாயின் வீடும், குல்காம் மாவட்டத்தின் மதல்ஹாமா பகுதியில் ஜாகிர் அகமது கனி வீடும் இடித்து தகர்க்கப்பட்டன. இவர்கள் 3 பேரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று ஸ்ரீநகர் பகுதியில் உள்ள சபாகடல், சவுரா, பாண்டச் பெமினா, ஷால்டெங், லால் பஜார் மற்றும் ஜாடிபால் உள்பட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் சிலரை போலீசார் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே உளவுத்துறை தகவல்களின் பேரில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள முஷ்தகாபாத் மச்சில் செடோரி நாலா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து நவீன ரக எந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புபடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதையடுத்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தனது ராணுவத்தினரை குவித்து வருகிறது.

கடந்த 24-ந்தேதி இரவு கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இந்தியாவும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது. விடிய, விடிய இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. நேற்று முன்தினம் இரவும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்திய நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story