வாக்குவாதம்; நிறைமாத கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலதிபர்

இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே யுடா பகுதியை சேந்தவர் ஞானேஷ்வர் (வயது 27). இவரது மனைவி அனுஷா (வயது 27). இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.ஞானேஷ்வர் பாஸ்ட்புட் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். ஸ்கவுட்ஸ் மற்றும் சாகர்நகர் ஆகிய 2 இடங்களில் ஞானேஷ்வரின் 2 ஓட்டல்கள் உள்ளன.
இதனிடையே, அனுஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். 8 மாத கர்ப்பிணியான அனுஷாவுக்கும் அவரது கணவர் ஞானேஷ்வருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வபோது வாக்குவாதம், சண்டை நிலவி வந்தது.
இந்நிலையில், அனுஷாவுக்கும் ஞானேஷ்வருக்கும் இடையே இன்று காலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஷ்வர் தனது காதல் மனைவி அனுஷாவை கழுத்தை நெரித்துள்ளார். இதில் அனுஷா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
இதையடுத்து, ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்த ஞானேஷ்வர் தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ஞானேஷ்வர் கழுத்தை நெரித்ததிலேயே அனுஷா உயிரிழந்துள்ளார். இதையடுத்து மனைவியை கொன்ற ஞானேஷ்வர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஷாவின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாக்குவாதத்தால் நிறைமாத கர்ப்பிணியை காதல் கணவரே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






