கத்தார் அதிபர் இன்று இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கிறார்

கத்தார் அதிபர் இன்று இந்தியா வருகிறார்.
டெல்லி,
கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தனி விமானம் மூலம் இன்று மாலை டெல்லி வரும் கத்தார் அதிபர் அல்தானியை இந்திய அதிகாரிகள் வரவேற்கின்றனர். அதன்பின்னர், அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார்.
அதன்பின்னர், அதிபர் அல்தானி நாளை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை அதிபர் அல்தானி சந்திக்கிறார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
முன்னதாக இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரை கத்தார் கைது செய்தது. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து கடந்த ஆண்டு 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.