மருத்துவ கழிவுகள் விவகாரம்: குத்தகை எடுத்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு


மருத்துவ கழிவுகள் விவகாரம்: குத்தகை எடுத்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 29 Dec 2024 9:45 AM IST (Updated: 29 Dec 2024 11:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை, கருப்பு பட்டியலில் வைக்க கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவக்கழிவுகள் 6 இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியமே, 30 லாரிகளில் கழிவுகளை மீண்டும் எடுத்துச் சென்றது.

மேலும் இதுதொடர்பாக அரசுக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், அரசின் நிர்வாக தோல்வியை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளது என தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே, திருவனந்தபுரம் மாநகராட்சியின் அங்கீகாரம் பெற்று ஒப்பந்தம் எடுத்துள்ள சன்ஏஜ் எகோ சிஸ்டம் என்ற நிறுவனம் தான் , கேரள கழிவுகளை தமிழகத்தில் கொட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிருந்தது. ஆனால், அந்நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை அகற்ற குத்தகை எடுத்த அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்ததுடன், அந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதார துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் சட்டவிரோத செயல்களால் அரசுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பையும் அந்நிறுவனமே ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது.


Next Story