பதவியேற்றபோது ஒவைசி எழுப்பிய கோஷம்.. சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது


பதவியேற்றபோது ஒவைசி எழுப்பிய கோஷம்..  சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 26 Jun 2024 12:23 AM IST (Updated: 26 Jun 2024 10:33 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, உருது மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 2-வது நாளாக புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

ஐதராபாத்தில் இருந்து 5-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, உருது மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். முதலில், சில பிரார்த்தனை வாசகங்களை வாசித்தார். பதவியேற்பின் இறுதியில், 'ஜெய் தெலுங்கானா, ஜெய் பீம், ஜெய் மீம்' என்று கோஷமிட்டார். அத்துடன், மேற்கு ஆசியாவில் போர் நடந்து வரும் பிராந்தியத்தை வாழ்த்தி (ஜெய் பாலஸ்தீனம்) முழக்கமிட்டார். அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த ராதா மோகன் சிங், ''பதவியேற்பு உறுதிமொழியை தவிர வேறு எதுவும் சபைக்குறிப்பில் இடம்பெறாது'' என்று ஆளுங்கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்தினார்.

சற்று நேரத்தில், தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப், சபாநாயகர் இருக்கைக்கு வந்தார். பதவியேற்பு உறுதிமொழி மட்டுமே இடம்பெறும் என்று கூறி, மேற்கு ஆசிய பிராந்திய வாழ்த்து கோஷத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.


Next Story