கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு


கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பியதாக, 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கும்பமேளா குறித்து சமூக வலைத்தள கணக்குகளில் போலி செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்ததாக கடந்த 14-ந்தேதி சமூகவலைத்தளங்களில் வீடியோ பரவியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அது வங்காளதேசத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்த வீடியோ என்பது தெரியவந்தது. இந்த வீடியோவை கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என பொய் செய்தி பரப்பியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 34 சமூகவலைத்தள கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக எஸ்.எஸ்.பி. (கும்பமேளா) ராஜேஷ் திவேதி கூறுகையில், "பிரயாக்ராஜுடன் இந்த காணொளி தொடர்பில்லாதது என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர், மேலும் சமூக ஊடகங்களில் வெளியான கூற்றுக்களை மறுத்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட சமூக வலைதள கணக்குகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


Next Story