டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்


டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2024 1:54 PM IST (Updated: 11 Dec 2024 2:40 PM IST)
t-max-icont-min-icon

டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி, நேற்று முன்தினம் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

இதனையடுத்து டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி இன்று நோட்டீஸ் வழங்கினார். அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென அதில் கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்தார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்தார்.

இந்த நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில், திமுக எம்.பி.கனிமொழி பேசுகையில், "மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைத்தால், கலாச்சார மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் முன்பு, மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. இந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே கனிம சுரங்கத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:- "தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது; சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று மத்திய அரசால் வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பேசியதாவது:- " டங்ஸ்டன் சுரங்கத்தை பொறுத்தமட்டில் மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் மற்றும் அரிட்டாப்பட்டிக்கு நடுவில் அமைவதற்காக மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்பதும் அதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு அள்ளிக்கொடுக்கப்போகிறது என்ற முடிவும் அதிர்ச்சியை தருகிறது. பாஜகவை பொறுத்தவரையில் தொடர்ந்து அழகர் கோவில் போன்ற இறை நம்பிக்கை உள்ள இடங்களையும், முருகனின் அறுபடை வீடுகளையும் அழிப்பதிலேயே பாஜக ஏன்?இந்த துடி துடிக்கிறது என்று தெரியவில்லை. கடவுளா? வேதாந்தாவா? என்றால் வேதாந்தாவுக்கு சாதகமாக பாஜக அரசு செயல்படுகிறது. எனவே தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.


Next Story