திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருந்தது. வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது.
இந்நிலையில், திருப்பதியில் கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.30.75 கோடியை காணிக்கையாகச் செலுத்தியுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.