இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டா இயக்குனர் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 பேருக்கு 1 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் மையங்களில் பணியாற்றி வரும் 4 மூத்த விஞ்ஞானிகளுக்கு பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம். தேசாய், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் எம்.மோகன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ஏ.ராஜராஜன், தமிழ்நாடு, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவன உந்து விசை வளாக இயக்குனர் ஜெ.பாக்கியராஜ் ஆகிய 4 மூத்த விஞ்ஞானிகள் இந்த மையங்களில் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பணி ஓய்வு பெற இருப்பதையொட்டி, மேலும் 1 ஆண்டுகள் இவர்களுடைய பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து, மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நியமனக் குழு செயலகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.