மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 4 வங்காளதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நகர போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு வாடகை வீட்டில் 38 முதல் 50 வயது வரையிலான 4 வங்காளதேச பெண்கள் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கும் இங்கு தங்குவதற்கும் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த ஆவணங்களும் இல்லாமல் அவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.